தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன அரசின் புள்ளிவிவரங்கள். இந்த எண்ணிக்கை நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை பெற்றவர்களை குறிப்பது என்ற நிலையில் சிகிச்சைக்கு வராதவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் சுமார் 13 லட்சம் நாய்கள் உள்ளதாகவும் இதில் நான்கரை லட்சம் நாய்கள் தெருவில் யாருடைய பராமரிப்பும் இன்றி சுற்றித்திரிபவை என்றும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. நாய்க்கடிகளால் ஏற்படும் உயிர்க்கொல்லி ரேபிஸ் நோய் மட்டுமல்ல…சாலைகளில் ஏற்படும் விபத்துகளும் சில நேரங்களில் மரணங்களுக்கும் பல நேரங்களில் எலும்பு முறிவுகளுக்கும் காரணமாகின்றன.
இந்த சூழலில்தான் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முனைந்துள்ளது தமிழக அரசு. மாநில அரசின் திட்டக்குழு தனி வரைவுக் கொள்கையையே வகுத்துள்ளது.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன் ஒரு நாய் கூட விடுபடாமல் இருக்க ஊசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளக் குறியீடு இட இக்கொள்கை வலியுறுத்துகிறது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் இயன்றவரை அதிகளவிலான தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் நாய்கள் மிகுந்த பகுதிகளுக்கு சென்று கருத்தடை சிகிச்சை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கென்றே திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு உணவளிக்கவும் தத்தெடுக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இந்த வரைவு கொள்கையில் கூறப்பட்டுள்ளது. பிற நாடுகளில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நடைமுறைகளை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.