பெரியகுளம்: தொடர்மழையினால் பெரியகுளம் அருகே உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலரும் தங்களுடைய கிராமத்துக்கு திரும்ப முடியாமல் கரையிலே பல மணி நேரம் காத்திருந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர். இந்த மலைகிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து இருந்தாலும் அப்பகுதி அடர்வனமாக இருப்பதால் பெரியகுளம் வழியேதான் மக்கள் வந்து செல்கின்றனர்.
இதற்காக இவர்கள் கல்லாற்றை கடந்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று (டிச.12) முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கல்லாற்றில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே சின்னூர் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. பெரியகுளம் பகுதிக்கு வந்திருந்தவர்களும் ஊருக்கு திரும்ப முடியாமல் கரையிலே பல மணி நேரம் காத்திருந்தனர்.
இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், “ஆண்டுதோறும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பம்பாறை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் 10 முதல் 15 நாட்கள் வரை ஆற்றை கடந்து செல்ல முடிவதில்லை. ஆகவே அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளை பொருட்களையும் எடுத்துச்செல்ல முடிவதில்லை.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பத்து நாட்களாக கடக்க முடியவில்லை. இதனால் நோயுற்ற பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் அவர் உயிரிழந்தார். நிரந்தர தீர்வுக்கு பாலம் அமைக்க வேண்டும்” என்றனர். இந்நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் கரையில் பரிதவித்தவர்கள் பெரியகுளத்தில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கினர். நீர்வரத்து குறைந்ததும் ஊருக்கு திரும்பச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.