ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார புதிய ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கடந்த நவ. 13 மற்றும் 14ம் தேதிகளில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்தார். நவ. 26ல் ஆய்வு குறித்து 8 பக்க அறிக்கை வெளியானது. அதில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி, ரயிலை இயக்குவதற்கு முன் சில திருத்தங்களை சரி செய்த பின் புதிய ரயில் பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய ரயில் பாலத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த குறைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 16ம் தேதி புதிய ரயில் பாலத்தை ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (ஆர்டிஎஸ்ஓ) அதிகாரிகள் ஆய்வு செய்ததை தொடர்ந்து, உலோகம் மற்றும் ரசாயனத்துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் பாலம் மற்றும் கட்டுமானம் பிரிவு முதன்மை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். நேற்று ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் முதன்மை செயல் இயக்குநர் நாராயண் சிங் தலைமையில் ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர செயல் இயக்குனர் திலீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு ரயில் பெட்டியில் வந்தனர். மண்டபம் – ராமேஸ்வரம் புதிய ரயில் பாலம் வழியாக 30 கி.மீ வேகத்தில் ஆய்வு ரயில் பெட்டி இயக்கப்பட்டது.
தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளை பார்வையிட்டு, மீண்டும் ராமேஸ்வரம் – மண்டபம் ரயில் வரை ஆய்வு ரயில் பெட்டியில் இருந்தபடி பாலத்தை பார்வையிட்டு வந்தனர். இந்த ஆய்வு பெட்டியில் டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட தேசிய ஏஜென்சி ஊடகவியலாளர்கள் பயணம் செய்து பாலத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சென்றனர். இதன்பின்னர் மண்டபம் ஆர்விஎன்எல் அலுவலகத்தில் பாலத்தின் கட்டுமானம் உறுதி திறன், தொழில் நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.